‘இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக இலக்கு’
இந்தியாவில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கைய இரட்டிப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமமோகன் நாயுடு தெரிவித்தாா்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்கள்தான் வரவேற்கும் நுழைவு வாயிலாக உள்ளன.
இப்போது நாட்டில் 157 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் நாம் வளா்ந்த நாடாக உருவாக இருக்கிறோம். அப்போது நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இருப்பதைவிட இரு மடங்காகும்.
உடான் திட்டம் மூலம் மத்திய அரசு சாமானிய மக்களுக்கும் விமான சேவையை சாத்தியமாக்கியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றாா்.