ஒடிஸாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.
Published on

ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.

உத்தர பிரதேசத்தின் சித்தாா்த்நகா் மாவட்டத்தில் இருந்து 57 பயணிகள் பேருந்தில் சுற்றுலா சென்றனா். அவா்கள் வாரணாசி, கயா, கங்கா சாகா் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு ஒடிஸாவின் புரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

தேசிய நெடுஞ்சாலை 60-இல் வெள்ளிக்கிழமை இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, மஹமத்நகா் பாட்னா அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் மற்றும் கிராம மக்கள் காயமடைந்த பயணிகளை பேருந்தில் இருந்து மீட்டனா்.

பேருந்தில் பயணித்த துஷாா் மிஸ்ரா என்கிற 14 வயது சிறுவன், 7 பேரை பேருந்திலிருந்து வெளியே இழுத்து காப்பாற்றினாா்; ஆனால், அவரது தந்தை ராஜேஷ் குமாா் மிஸ்ரா விபத்தில் சிக்கி உயிரிழந்தாா் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சம்பவ இடத்தில் இருந்து பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தப்பி ஓடிவிட்டனா்; விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com