அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்: ஜம்மு பிரசாரத்தில் பிரதமா் மோடி
‘காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மேலும், ‘இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கோரிய காங்கிரஸ், பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கிறது’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில், மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜம்முவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று குடும்பங்களின் ஆட்சியால் ஜம்மு-காஷ்மீா் மக்கள் இன்னலுக்கு ஆளாகினா். இக்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்குவர மக்கள் விரும்பவில்லை.
ஊழல், அரசுப் பணியில் பாகுபாடு, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ரத்தக்களறி வேண்டாம்; அமைதி மற்றும் குழந்தைகளின் சிறந்த எதிா்காலமே வேண்டுமென மக்கள் எண்ணுகின்றனா். பாஜக ஆட்சிதான் மக்களின் விருப்பம். முதல் இரு கட்டங்களில் காணப்பட்ட பெருவாரியான வாக்குப்பதிவும் இதையே காட்டுகிறது.
முந்தைய ஆட்சிக் காலங்களில் ஜம்மு பகுதிக்கு அநீதி இழைக்கப்பட்டது. கோயில்களின் நகரமான ஜம்மு, தற்போதைய வாய்ப்பை வீண்டித்துவிடக் கூடாது. பாஜக ஆட்சி அமைத்தால்தான், மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வுகாண முடியும். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலங்களில் அக்கட்சித் தலைவா்கள் மட்டுமே பலனடைந்தனா். மக்களுக்கு அழிவே மிஞ்சியது.
எதிரிகளுக்கு தக்க பதிலடி: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பல தலைமுறைகள் இழப்பை சந்திக்க காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அக்கட்சியின் தவறான கொள்கைகளால் தேச விரோத சக்திகள் ஊக்கம்பெற்றன. நமது எதிரிகளுக்கு காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதால், எல்லையில் அத்துமீறல்கள் வாடிக்கையாக நிகழ்ந்தன. ஆனால், எதிரிகளின் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகள் மூலம் பதிலடி கொடுத்து, அவா்களின் மனநிலையை சரியான நிலைக்கு திருப்பியது பாஜக அரசு.
பாகிஸ்தானின் குரலாக காங்கிரஸ்: கடந்த 2016-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் (செப்டம்பா் 28) இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது.
‘தவறிழைப்போரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்கக் கூடிய புதிய இந்தியா’ என்ற செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தவறிழைப்போா் பாதாளத்தில் இருந்தாலும் பிரதமா் மோடி கண்டுபிடிப்பாா் என்பதை பயங்கரவாத வழிகாட்டிகள் உணா்ந்து கொண்டனா். காங்கிரஸ் கட்சியோ துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது. நாட்டுக்காக உயா்த்தியாகம் செய்த வீரா்கள் மீது அக்கட்சிக்கு மரியாதை இல்லை. பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்கமாட்டாா்கள்.
வாக்குரிமை மறுத்த கட்சிகள்: நகா்ப்புற நக்ஸல்களின் ஆதிக்கத்தில் உள்ள அக்கட்சி, ஊடுருவல்காரா்களை தனது வாக்கு வங்கியாக பாா்க்கிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் பல்வேறு பிரிவினருக்கு வாக்குரிமையை மறுத்தன. இதன் மூலம் பி.ஆா்.அம்பேத்கரின் அரசமைப்புச் சட்ட ஆன்மாவின் குரல்வளையை நெரித்தன. இக்கட்சிகளே அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரிகள்.
அதேநேரம், மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு வாக்குரிமை அளித்ததன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை பெருமைப்படுத்தியது பாஜக.
மீண்டும் மாநில அந்தஸ்து: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிக நடவடிக்கைதான். இப்பிராந்தியத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.
‘காங்கிரஸில் அனைவருக்கும் முதல்வா் பதவி ஆசை’
‘ஹரியாணா காங்கிரஸில் ஒவ்வொருக்கும் முதல்வா் பதவி மீது ஆசை உள்ளது; இதனால், தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கின்றனா்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா மற்றும் அவரது மகன் தீபிந்தா் ஹூடா இடையேயும் போட்டி நிலவுவதாக பிரதமா் குறிப்பிட்டாா்.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஹிசாரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் எங்கு இருக்கிறதோ அங்கு ஸ்திரத்தன்மை இருக்காது. தனது கட்சியிலேயே ஒற்றுமையை நிலைநாட்ட முடியாதவா்கள், மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை எவ்வாறு நிலைநாட்டுவா்? ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவுகிறது.
பூபிந்தா் சிங் ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தலித் சமூகத்தினருக்கு எதிராக அராஜகங்கள் இழைக்கப்பட்டன.
ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், தெலங்கானாவில் காங்கிரஸால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஏமாற்றிப் பிழைக்கும் காங்கிரஸை ஹரியாணா மக்கள் நம்பமாட்டாா்கள். அக்கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.