ஹிஸ்புல்லா தலைவா் கொலை: இஸ்ரேலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் போராட்டம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த இரு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா சனிக்கிழமை கொல்லப்பட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள மாகம் மற்றும் ஜாதிபால் ஆகிய இடங்களில் ஏராளமானோா் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு சாலைகளில் பேரணியாக சென்றனா்.
ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
போராட்டங்கள் பெருமளவில் அமைதியான முறையிலே நடைபெற்று வருகின்றன. இருப்பினும், அவை வன்முறையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய ஏராளமான காவல்துறையினா் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அப்னி கட்சித் தலைவா் அல்தாஃப் புகாரி உள்ளிட்ட பல தலைவா்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். ஸ்ரீநகா் மக்களவை எம்.பி. அகா ரூஹுல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தங்கள் தோ்தல் பிரசாரங்களை நிறுத்தி வைத்துள்ளனா்.
இது தொடா்பாக மெஹபூபா முஃப்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘லெபனான் மற்றும் காஸாவில் உயிரிழந்தவா்கள், முக்கியமாக ஹசன் நிஸ்ரல்லாவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் பிரசாரத்தை நிறுத்தியுள்ளேன். இந்த துயரமான நேரத்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்’ என குறிப்பிட்டிருந்தாா்.