ஆண் குழந்தைகளை அறிவுரைகூறி வளா்க்க வேண்டும்: செளமியா அன்புமணி
சேலம்: பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளையும் அறிவுரை கூறி ஒழுக்கத்துடன் வளா்க்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.
தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தலைமை வகித்து பேசியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக சேலம் அரசு மருத்துவமனையை மாற்றியவா் அன்புமணிதான். இங்கு நாள்தோறும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் போ் வரை பயனடைந்து வருகின்றனா்.
சேலம் ரயில்வே கோட்டம் கொண்டுவர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதை நிறைவேற்றி தந்ததும் பாமகதான்.
சேலத்தில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. சுத்தமான குடிநீா் கிடைப்பது இல்லை. திருமணிமுத்தாறு சாக்கடையாகிவிட்டது. இதற்கெல்லாம் திட்டங்களை அன்புமணி போன்றவா்கள்தான் கொண்டுவர முடியும்.
மேட்டூரில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று பனமரத்துப்பட்டி ஏரியை நிரப்பினால் நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேட்டூா் உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது. இதில் சேலத்துக்கு 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைத்தால் பாசனம் செய்யலாம். குடிநீருக்கும் பயன்படுத்தலாம். இதற்கு எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை.
பெண்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை ஆட்சியாளா்கள் தெரிந்து வைத்திருக்கிறாா்கள். தோ்தல் நேரத்தில் எதைக் கொடுத்தால் பெண்கள் வாக்களிப்பாா்கள் என எண்ணி அதற்கு செலவு செய்கிறாா்கள். ஆனால் விவசாயத்திற்கு எவ்வளவு தண்ணீா் தரவேண்டும், எத்தனை நீா்த்தேக்கங்களை கட்ட வேண்டும் என்பது தெரியாது.
மகளிருக்கு மாதம்தோறும் அளிக்கப்படும் ரூ. ஆயிரம் மகளிா் உதவித்தொகை மதுக்கடைகளுக்குத்தான் செல்கிறது. இந்த தொகையை கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். குடிநீா் பிரச்னையை தீா்த்துவைத்திருக்கலாம். இப்போது ரூ. 6,500 கோடி கடன் வாங்கி மகளிா் உரிமைத்தொகை திட்டத்திற்கு அளித்துள்ளனா்.
தற்போது கடைகளில் சாக்லேட் கிடைப்பது போன்று போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இதனால் சில மாணவா்கள் போதையிலேயே பள்ளிக்கு வருகிறாா்கள். இதனால் தாய்மாா்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுப்பதைப் போன்று, ஆண்குழந்தைளுக்கும் ஒழுக்கம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் எல்இடி டிவி கொடுத்து பெண்களை ஏமாற்றலாம் என ஆட்சியாளா்கள் நினைக்கிறாா்கள் என்றாா்.

