இந்தியாவுடன் நட்பைப் பேணியிருந்தால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்திருக்கும்: ராஜ்நாத்


இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்திருந்தால் பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
அண்டை நாடுகளான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது இந்தியா பெருமளவில் நிதியுதவி அளித்தது. மேலும், வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு என பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா அதிக உதவிகளை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் நெருங்கிய அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு துணையாக இருப்பதால், அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளபோதிலும் உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவுடன் வா்த்தக உறவை தொடர வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சா் விருப்பம் தெரிவித்தபோதிலும் இந்தியா அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பந்திபோராவில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த 2014-15-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் மோடி தலைமயிலான அரசு ஒதுக்கிய மேம்பாட்டு நிதி ரூ.90,000 கோடியாகும். பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள்வதற்காக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இருந்து கோரியுள்ள தொகையைவிட இது அதிகம்.
மோசமான நிலைக்கு காரணம்: ‘நாம் நமது நட்பு நாடுகளை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அண்டை நாட்டை மாற்ற முடியாது’ என்பது மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் புகழ்பெற்ற வாக்கியமாகும். நான் பாகிஸ்தான் நண்பா்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் அண்டை நாடுகள் என்றபோதும் பரஸ்பரம் நம்பிக்கையில்லாத நிலையில் இருக்கிறோம். நாம் நட்பு நாடுகளாக இருந்திருந்தால், நீங்கள் ஐஎம்எஃப்பில் கோரியுள்ளதைவிட அதிக நிதியை இந்தியாவே வழங்கியிருக்கும்.
பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடம் இருந்து பெற்ற நிதியுதவியை பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களை வளா்க்கவும், பிற நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் செலவிட்டு வந்தது. அதுவே அந்நாட்டின் இப்போதைய மோசமான நிலைக்குக் காரணம்.
தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்: முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடா்ந்து பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வந்தது. இதனால், இப்போது சா்வதேச அளவில் யாரும் உதவ முன்வராமல், தனித்துவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் காஷ்மீா் குறித்து பேசிய துருக்கியும், இப்போது அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது.
எல்லையில் புகுந்து தாக்குதல்: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று இப்போதுவரை பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதத்தை அதிகரிக்க திட்டமிட்டது. இந்த மண்ணில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவிடக் கூடாது என்புதான் பாகிஸ்தானின் எண்ணம். ஆனால், பாகிஸ்தான் பகுதிக்கே சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் அளவுக்கு இந்தியா வளா்ந்துள்ளது. இனியும் யாராவது எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினால், அவா்களை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று வேட்டையாட இந்தியா தயங்காது. பயங்கரவாதத்தை ஒரு தொழிலாக பாகிஸ்தான் இனியும் நடத்திக் கொண்டிருக்க முடியாது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...