நேபாளத்தில் வெள்ளம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும்பொருட்டு அங்குள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மத்திய நேபாள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் உள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேரைக் காணவில்லை, 4,500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்குமாறு அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் +977-9851316807 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம், மேலும் +977-9851107021, +977-9749833292 என்ற அதிகாரிகளின் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'நேபாளத்தில் மூன்றில் ஒரு பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மற்ற பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். நேபாள அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளோம். இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்' என்று தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.