ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து சில வாரங்களுக்கு முன் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
தொடர்ந்து மத்திய அமைச்சரவை கடந்த செப். 18 ஆம் தேதி இதற்கு ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தவும், முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 100 நாள்களுக்குள், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படியே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தெரிவித்தார்.
இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது நடைமுறைச் சாத்தியமில்லாதது, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதனை நடைமுறைக்கு கொண்டுவரும் பொருட்டு அரசியலமைப்பு சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் 3 மசோதாக்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருகிற குளிர்காலக் கூட்டத் தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?
சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள்
இதற்காக சட்டப்பிரிவுகளில் 3 திருத்தங்கள், ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவுகளில் 12 புதிய துணை உட்பிரிவுகளைக் கொண்டு வருதல், சட்டப்பேரவைகளுடன் யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கு 3 சட்டங்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றை ராம்நாத் கோவிந்த் குழு முன்மொழிந்துள்ளது.
இதன் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உள்பிரிவுகளை கொண்டுவர வேண்டியுள்ளது.
முதல் சட்டத்திருத்த மசோதாவில், இந்த நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக சட்டப்பிரிவு 82ஏ-ல் துணைப்பிரிவு (1) சேர்க்க வாய்ப்புள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்களை ஒன்றாக நடத்த 82ஏ-ல் துணைப்பிரிவு (2)-யைச் சேர்க்கலாம்.
சட்டப்பிரிவு 83(2)-யைத் திருத்தி மக்களவையின் காலம் மற்றும் கலைப்பு தொடர்பாக துணைப்பிரிவுகள் (3) மற்றும் (4)-யைச் சேர்க்கவும் சட்டப் பேரவைகளை கலைப்பது மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் ஆகியவற்றுக்கு சட்டப்பிரிவு 327 -யைத் திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் உள்ளன.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கொண்டுவரும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு குறைந்தபட்சம் 50% மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும் என்ற நிலையில், 50% மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று ராம்நாத் கோவிந்த் குழு கூறியுள்ளது.
இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதா, உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பானது.
புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய சட்டப் பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இதர மாநில சட்டப்பேரவைகளுடன் தேர்தல் நடத்துவதற்கு மூன்றாவது சட்டத் திருத்த மசோதா. இதற்காக தில்லியின் தேசிய தலைநகர் அரசுச் சட்டம்-1991, யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம்-1963 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019 ஆகிய சட்டங்களை திருத்தம் செய்ய பரிந்துரைக்கிறது.
இதையும் படிக்க | சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் தனியார்மயமாகின்றன!
குழுவின் பரிந்துரைப்படி, 2029 ஆம் ஆண்டு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு வந்தால் நாட்டில் உள்ள 17 மாநிலங்கள் 3 ஆண்டுகளுக்கும் குறைவான சட்டபேரவைக் காலத்தைக் கொண்டிருக்கும்.
நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட சட்டங்களை கொண்டுவருவதற்கான மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் இதனை எதிர்க்கும் பட்சத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இது சவாலாக அமையும். எனவே, நடுநிலையான கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், பெரும்பான்மை ஆதரவுடனுடன் பாஜக அரசு இதனை நடைமுறைப்படுத்துவது தற்போதைய சூழ்நிலையில் சற்று சவாலாகவே இருக்கிறது.