மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இடைக்காலத் தடை தீா்வல்ல!

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்துக்கு மத்திய அரசின் இடைக்காலத் தடை பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :7 மார்ச் 2026, 12:11 am

ஆசிரியர்

திட்டத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை உணா்ந்து நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை மத்திய அரசு இடைக்காலமாக நிறுத்திவைத்துள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியை நீண்ட நாள்களுக்கு கிடங்குகளில் சேமித்து வைப்பதால் நாளடைவில் அதில் கலக்கப்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்துகளின் வீரியம் குறைந்து விடுகிறது. அதனால் உறுதியளிக்கப்பட்டபடி மக்களுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடு நீங்கிவிடும் என்று கருத முடியாது என ஆய்வுகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரிசியை மாவாக்கி அதனுடன் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நுண்ணூட்டச் சத்துகளைச் சேர்த்து அதை மீண்டும் இயந்திரங்கள் மூலம் அரிசிபோல உருவாக்கி அந்த செறிவூட்டப்பட்ட அரிசி ஒரு கிலோவை 100 கிலோ சாதாரண அரிசியுடன் கலந்து தயாரிக்கப்படுவதுதான் செறிவூட்டப்பட்ட அரிசி.

நாடு முழுவதும் கடந்த 2019-21-க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது பல்வேறு வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் ரத்த சோகை ஒரு பிரச்னையாக இருப்பது தெரியவந்தது. அதற்குத் தீர்வுகாண 2022-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசியை பல்வேறு நலத் திட்டப் பயனாளிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் கடந்த 2024 மார்ச்சுடன் முடிவடைந்தபோதிலும், வரும் 2028-ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் பிறநலத்திட்ட உதவிகள் குறித்து அண்மையில் மத்திய அரசு ஆய்வு செய்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை இடைக்காலமாக நிறுத்திவைப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சுமார் ரூ. 17,000 கோடி செலவில் அமல்படுத்திய இந்தத் திட்டம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

'தலசீமியா', 'சிக்கில் செல்' போன்ற நோய் உள்ளவர்கள் உடலில் அதிகப்படியான இரும்புச் சத்து சேர்ந்தால் மேலும் பாதிப்பு ஏற்படலாம் என நீதி ஆயோக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த ரகசிய அறிக்கை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

திட்டம் முன்னோடியாகச் செயல்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம், சுவை, அமைப்பு, தோற்றம் ஆகியவற்றில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது; ஆதலால், திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை; சில இடங்களில் அடிப்படையிலேயே கோளாறு நிகழ்ந்துள்ளது என நீதி ஆயோக் அரசுக்கு சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல், அரிசியில் கலக்கும் நுண்ணூட்டச் சத்துகளை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு சுமார் ரூ. 1,800 கோடி மதிப்புள்ள அந்தச் சந்தையைக் கைப்பற்ற பல முறைகேடான வழிகளில் அழுத்தம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மலைப் பிரதேசங்களில் விநியோகம் செய்யப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி எனக் கூறி அச்சமடைந்து, அதை அந்த மக்கள் உண்ண மறுத்ததாகச் செய்திகள் வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, ரத்த சோகை குறைபாட்டைப் போக்க செறிவூட்டப்பட்ட அரிசி குறிப்பிட்ட அளவுக்கே பலன் தரும் என்றும், முழுமையான பலனைத் தராது என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர். மக்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பலதரப்பட்ட உணவுகளைச் சாப்பிடுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பயனுள்ள நல்லதொரு தீர்வாக அமையும் என்று வலியுறுத்தினர்.

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், சில மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், செறிவூட்டப்பட்ட அரிசியால் குறிப்பிடத்தக்க உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை என்றும், இதுவே ரத்த சோகைக்கு தீர்வுகாண சிக்கனமான திட்டம் என்பதால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து திட்டத்தை அறிவித்து நிறைவேற்றியது.

நாட்டில் உள்ள சுமார் 80 முதல் 100 கோடி மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்யத் திட்டமிட்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் குறைபாடு உள்ளதாகக் கூறி இப்போது நிறுத்தப்பட்டாலும் இதுவரையில் சுமார் 60 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே, உடலில் அதிகப்படியான நுண்ணூட்டச்சத்து தேக்கத்தால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து அரசு கணக்கெடுத்து அதற்குத் தீர்வுகாண வேண்டும்.

பெரும்பான்மையான மக்கள் பலன் அடையும் திட்டம், அதுவும் உடல்நலன் சார்ந்த திட்டம் எனும்போது, அதை ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் திட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. நாடு தழுவிய அளவில் காணப்படும் ரத்த சோகைப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.