தேர்தல்களும் நலத் திட்டங்களும்...
தேர்தலுக்காக போடப்படும் திட்டங்கள் என்றாலும், வாக்களித்த மக்களுக்குப் பயன்படவேண்டும்.


"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே பல திட்டங்கள் வரும் முன்னே' என்பது புதிய மொழி. மத்திய, மாநில அரசுகள் புதிய புதிய திட்டங்களைப் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றன. மக்களைக் கவர்வதற்கு அவை உதவி செய்யலாம். மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவை உதவி செய்யுமா?
இந்தியாவிலேயே கல்வியிலும், பொருளாதாரத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. கல்வித் துறையிலும், பெண்களின் முன்னேற்றத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதும், அனைத்துத் திட்டங்களும் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. பல திட்டங்கள் அதிகாரிகள் நிலையிலேயே நீர்த்துப் போகின்றன.
"மக்களைத் தேடி அரசு' என்ற நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம் நகர்ப் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்து 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
45 நாள்களில் மனுக்களுக்குத் தீர்வு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அனைத்து இடங்களிலும் இந்த முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், நவம்பர் வரை இப்படி 10 ஆயிரம் முகாம்களை நடத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் உள்ளாட்சி, வருவாய்த் துறையினர் புலம்பித் தவித்தனர். "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினருக்குத் தலைமை கட்டளையிட்டுள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் ஆளும் கட்சியினர் அது குறித்துக் கவலைப்படுவது இல்லை. கண்டும், காணாமலும் இருப்பதால் மக்கள் நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த முகாம்கள் பெரும்பாலும் தனியார் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு முகாமை நடத்த அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்துக்கு ரூ.32 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதைவிட அதிகமாக செலவாவதாக உள்ளாட்சித் துறையினர் கூறுகின்றனர்.
மேலும், முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் விடுமுறை நாள்களிலும் முகாம்கள் நடத்தப்படுவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக வருவாய்த் துறையினர் கூறுகின்றனர். இதனால், அவர்கள் திட்ட முகாம்களைச் செம்மையாக நடத்துவது இல்லை. அரசுத் துறையின் தேவைகளை மக்களின் இருப்பிடத்துக்கே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே "உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியதுதான். ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்கள் சந்திக்கும் நடைமுறைச் சிரமங்களையும் அரசு சரி செய்ய வேண்டும்.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 2022 செப்டம்பர் 15}ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை கடந்த 2023 ஆகஸ்ட் 25 அன்று மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் பாடங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
முதல்வரின் "தாயுமானவர் திட்டம்' என்பது ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 2024 பிப்ரவரி 19 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கனவுத் திட்டமான தாயுமானவர் திட்டத்தின்கீழ் சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் உதவிகள் அனைத்தும் வழங்கி, அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தனியாக வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலன் பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற வறிய நிலையில் வாழும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது, தமிழ்நாட்டில் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாகும். இதற்கு பணமில்லா உதவிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்குவதற்கான தமிழக அரசின் திட்டமாகும்.
2009-ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டமாகத் தொடங்கி, 2012-இல் மாற்றப்பட்ட இந்தத் திட்டம், இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டை வழங்குகிறது. ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் மக்கள், உயரிய மருத்துவ சிச்சைகளைப் பணம் இல்லாமல் பெறுவதை இது உறுதி செய்கிறது.
முதல்வரின் "பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்' 1992}ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆகும். இது பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண் சிசுக் கொலையை ஒழித்தல், சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல் போன்ற பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் நேரடியாக அரசின் முதலீடு மூலம் பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 29,95,098 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,75,553 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொண்டு வரப்பட்டது விடியல் பயணத் திட்டமாகும். இதன் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மட்டும் 22 கோடி முறை மகளிர் விடியல் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் புதிய சாதனை அளவை எட்டியுள்ளன. மொத்தம் ரூ.577 கோடி அளவு விற்பனையாகியுள்ளது. சுய உதவிக் குழு தயாரிப்புகளின் விற்பனையை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் "மதி அங்காடிகள்' அமைக்கப்பட்டு வருகின்றன.
"நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் மூலம் கட்டணம் இன்றி மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை மற்றும் பல்துறை சோதனைகளும் செய்யப்படும். புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியக்கூடிய பரிசோதனையும் செய்யப்படும். முகாம்களில் மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து சான்றுகள் தரப்படும். தமிழகம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். இதற்கான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயவங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயனாளிகள் பெற்று பயனடைவது அவ்வளவு எளிதல்ல. இத்தனை திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அதிகாரிகளும், அலுவலர்களும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
"மாநிலங்கள் தன்னிறைவு பெற்றால்தான் இந்தியா வளரும். அதனால் முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதை மத்திய அரசும், மாநில மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். திட்டங்கள் தீட்டப்பட்டால் மட்டும் போதாது. அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
தேர்தலுக்காக போடப்படும் திட்டங்கள் என்றாலும், வாக்களித்த மக்களுக்குப் பயன்படவேண்டும். "நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்ற நீதிப் பாடல் தலைகீழ் பாடமாகிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...