
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று கேர உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய நிலையில், இது மிகப்பெரிய துரோகம் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று மத்திய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, இயற்கை பேரிடர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களின்படி அவை மறுசீரமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகத் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த அக்கறையின்மையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம், வயநாட்டில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள், நிலம், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் இழந்துவிட்டனர். இருப்பினும், அரசு கடன் தள்ளுபடியைச் செய்ய மறுக்கிறது.மாறாக, அவர்களுக்கு, கடன் மறுசீரமைக்கப்படும் என்று கூறுகிறது.
இது நிவாரணம் அல்ல. துரோகம். இந்த அக்கறையின்மையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம், அவர்களின் வலி புறக்கணிக்கப்படாது - நீதி கிடைக்கும் வரை ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் குரல் எழுப்புவோம்.
கடந்தாண்டு ஜூலை 30ல் முண்டக்கை, சூரல்மலா பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது, இது இரு பகுதிகளையும் கிட்டத்தட்ட அழித்துவிட்டது. இந்தப் பேரிடர் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் 32 பேர் காணாமல் போயுள்ளனர்.