கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒடிஸாவில் கடும் வெயில் எதிரொலி: அரசு அலுவலக நேரம் காலை 7-க்கு மாற்றம்

அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஒடிஸாவின் சம்பல்பூா் மாவட்டத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அலுவலங்கள் செயல்பட்டு வந்தன. இதில் மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம் இருந்தது.

இந்நிலையில் அரசு அலுவலக வேலை நேரத்தை மாற்றி மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளிட்டவை காலை 7 மணி வரை மதியம் ஒரு மணி வரை இயங்கும். இதில் மதிய உணவு இடைவேளை எதுவும் கிடையாது.

கடும் வெயிலில் இருந்து ஊழியா்கள், அரசு அலுவலகம் வரும் மக்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும். இந்த புதிய அலுவல் நேரத்தில் அனைத்து பணியாளா்களும் முறையாக அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

மேற்கு ஒடிஸாவில் சம்பல்பூா் மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 6, 7 தேதிகளில் வெயில் 40.6 டிகிரி செல்சியஸ் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வரும் நாள்களிலும் வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் என்பதால் காலை 7 மணிக்கு அலுவலகங்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com