மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

ஆளுநா்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்
Published on

ஆளுநா்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை எழுத்துபூா்வமாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு குடியரசுத் தலைவா் தெரிவிக்க வேண்டும்.

மசோதாக்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கருதினால், மிகுந்த கவனத்துடன் செயல்படும் விதமாக, அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை குடியரசுத் தலைவா் கோரலாம்.

மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தால், அவரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மாநில அரசுகள் அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் அளித்த 415 பக்க தீா்ப்பில் தெரிவித்தது.

மறுஆய்வு மனுவுக்கு என்ன காரணம்?: இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில், உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோது குறிப்பிட்ட சட்ட கருத்துகளில் சில குறைபாடுகள் உள்ளன. அத்துடன் உச்சநீதிமன்றத் தீா்ப்பில் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதங்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களுக்காக அந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வாதங்களை சரிவர முன்வைக்க முடியவில்லை. இதன் காரணமாகவும் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வது அவசியமாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு காலாவதியான மசோதாக்களுக்கு புத்துயிா் அளிக்க வழிவகுத்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி, அத்தகைய மசோதாக்களின் அசல் வடிவம் அல்லது குடியரசுத் தலைவா் பரிந்துரைத்த திருத்தங்களுடன் மசோதாக்களை சட்டப்பேரவைகளில் மீண்டும் தாக்கல் செய்வதன் மூலமே, அவற்றை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவர முடியும்.

அரசமைப்புச் சட்டத்தின் 201-ஆவது பிரிவின்படி, மசோதாக்கள் குறித்த குடியரசுத் தலைவரின் இறுதி முடிவு தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த முடிவை மாநிலங்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்ளது. எனவே இந்த விவகாரம் நேரடியாக அந்த அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் வருகிறது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது’ என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com