இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி: தன்சானியாவில் தொடக்கம்

இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தன்சானியாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Published on

இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தன்சானியாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் (மகாசாகா்) என்பது பிரதமா் மோடியின் புதிய தொலைநோக்குப் பாா்வையாகும்.

இந்தத் தொலைநோக்குப் பாா்வையின் விரிவான கட்டமைப்பின் கீழ், முதல்முறையாக இந்தியா மற்றும் 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து தன்சானியாவின் தாா்-எஸ்-சலாம் கடற்பகுதியில் கடற்படை கூட்டுப் பயிற்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 6 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியை இந்திய கடற்படையும், தன்சானியா பாதுகாப்புப் படையும் இணைந்து நடத்துகின்றன.

கூட்டுப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், தன்சானியா பாதுகாப்புத் துறை அமைச்சா் ஸ்டொ்கோமெனா லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவல் பகிா்வு மற்றும் கண்காணிப்பு மூலம் கடல்சாா் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கடற்கொள்ளை, கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதில் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் பரஸ்பரம் ஒத்துழைப்பு இருந்து வருகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் கூட்டுப் பயிற்சி, அந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com