புது தில்லி: ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதலை மத்திய அரசு நிகழ்த்துகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸை குறிவைத்து அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கபில் சிபல். மத்திய அரசு விசாரணை முகமைகளை பயன்படுத்தி காங்கிரஸை ஒடுக்க பார்க்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் பல்லாண்டுகள் முக்கிய அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில், காங்கிரஸில் எழுந்த உள்கட்சி பூசலால் அக்கட்சியின் மீதான அதிருப்தியால் காங்கிரஸிலிருந்து அவர் திடீரென விலகினார். அதனைத்தொடர்ந்து, சமாஜவாதி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார் கபில் சிபல்.
கபில் சிபல் இன்று(ஏப். 13) தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியிருப்பதாவது:
சொல்லளவில் மட்டுமே நாம்(இந்தியா) ஜனநாயகத்தின் தாயகமாகத் திகழ்கிறோம். ஆனால், நிஜத்தில்... நீங்கள்(மத்திய பாஜக அரசு) சர்வாதிகாரத்தின் தந்தையாக இருக்கிறீர்கள்!
அவர்கள்(பாஜக) ஹிந்து - முஸ்லிம் பிரிவினைவாத கொள்கையில் பிடிப்புண்டு, தங்களது அரசியல் கணக்கை நடத்தி விரும்புகிறார்கள். இதன்மூலம், எதிர்க்கட்சிகளை வீழ்த்த துடிக்கிறார்கள் என்றார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: “அமலாக்கத் துறையின் நோட்டீஸ் நடவடிக்கையானது செய்தி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இந்த செய்தி நிறுவனத்தில்தான் காங்கிரஸ் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அப்படியிருக்கையில், இது அக்கட்சியை ஒடுக்கும் நடவடிக்கை.
கடந்த 13 ஆண்டுகளாக நீங்கள்(மத்திய அரசு) நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்தது இதற்காகத்தான். உங்களுக்கு அந்த சொத்துகளை கையகப்படுத்த வேண்டும். அதன்மூலம், காங்கிரஸ் கட்சியை நிலைநடுங்கச் செய்யவும் வேண்டும்.
அந்த சொத்துகள் அனைத்தும் நாடெங்கிலும் பரவிக் கிடக்கின்றன. அதன் மதிப்பு ரூ. 600 கோடி இருக்கும். இதனால்தான் அந்த சொத்துகளை கையகப்படுத்த விரும்புகிறார்கள்” என்றார்.
வழக்கின் பின்புலம்: ஏஜேஎல் நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2014-ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
அதன் அடிப்படையில் கடந்த 2021-இல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் சொத்துகளை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.
இந்த நிலையில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


