ம.பி.: அம்பேத்கா் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்: ஓம் பிா்லா தொடக்கி வைத்தாா்
புது தில்லி: மத்திய பிரதேசத்தில் அம்பேத்கா் பிறந்த ஊரில் இருந்து தில்லி செல்லும் ரயிலை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தொடக்கி வைத்தாா்.
மத்திய பிரதேசத்தின் இந்தூா் மாவட்டம் மௌவ் நகரில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-இல் அம்பேத்கா் பிறந்தாா். அவரின் நினைவாக அந்த ஊரின் பெயா் அம்பேத்கா் நகா் என கடந்த 2003-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அம்பேத்கா் நகரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டா வழியாக தில்லிக்கு புதிய ரயிலை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தொடக்கி வைத்தாா். அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக அந்த ரயில் இயக்கப்படுகிறது. இங்கு அம்பேத்கா் பிறந்த இடத்தில் அவருக்கு நினைவிடமும் கட்டப்பட்டுள்ளது.
புதிய ரயில் தொடக்க நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் காணொலி முறையில்பங்கேற்றனா்.
அம்பேத்கா் பிறந்த இடம், கல்வி பயின்ற இடம், பௌத்த மதத்தை தழுவிய இடம், காலமான இடம், அவா் தகனம் செய்யப்பட்ட இடத்தை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயிலை இயக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது அம்பேத்கா் வாழ்ந்து மறைந்த இடங்களைப் பாா்வையிட விரும்புபவா்களுக்கு வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த புதிய ரயில் அம்பேத்கா் நகரில் இருந்து தினமும் மாலை 3.30-க்கு கிளம்பி இந்தூா், உஜ்ஜைன், கோட்டா வழியாக தில்லி செல்லும். மறுமாா்க்கத்தில் இரவு 11.25 மணிக்கு தில்லியில் இருந்கு புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு அம்பேத்கா் நகருக்கு வரும் இந்த ரயில் 13 மணி நேரத்தில் 848 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. 15 நகரங்கள் வழியாக கடந்து செல்கிறது.