பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இரங்கல்.
பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?
ANI
Published on
Updated on
1 min read

பஹல்காம் தாக்குதல் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மிக கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தாக்குதல் நடந்த பெஹல்காம் பகுதி மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தரப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் செய்திதொடர்பாளர்,

"அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி காலித் என்கிற சைஃபுல்லா கசூரி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மையமாகக் கொண்ட இருவர் இந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கு பகுதிகளில் மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதல் உள்ளூர் எழுச்சிகளாக இருக்கலாம்.

சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை இந்துத்துவா சக்திகள் அடக்குகின்றன. அதனால்தான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எந்தச் சூழலிலும் நாங்கள் எங்கும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com