பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
Published on
Updated on
1 min read

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசியதாவது:

”இந்த தருணத்தை பயன்படுத்தி மாநில அந்தஸ்தை கோர மாட்டேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனது அரசியல் அவ்வளவு மோசமானதா?

கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து கோரியுள்ளோம். எதிர்காலத்திலும் கோருவோம். ஆனால், 26 பேர் கொல்லப்பட்டுவிட்டனர், அதனால் எங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்பது எனக்கு அவமானம்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விருந்தினரான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வது எனது கடமை. என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்க வார்த்தைகள் இல்லை.

தந்தையை இழந்த குழந்தையிடமும், திருமணமான சில நாள்களில் கணவனை இழந்த மனைவியிடமும் என்னால் என்ன சொல்ல முடியும்? விடுமுறையை கழிக்க வந்தோம், எங்கள் தவறு என்ன என்று கேட்கிறார்கள்? நாங்கள் இதுபோன்ற தாக்குதலை ஆதரவளிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை.

26 ஆண்டுகளில் முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஒன்றுகூடி தாக்குதலைக் கண்டித்துள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் அரசு கொண்டுவந்த கண்டன தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com