
பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழிலாளர்களின் கூலி உயராமல், பின்தங்கியே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் உண்மை நிலை குறித்து பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகாலமாக, பெரும்பாலான இந்தியர்களின் கூலி உயர்த்தப்படாமல் தேங்கியே உள்ளது, இந்த நிலை கிராமப் பகுதிகளில் இன்னமும் மோசமாக உள்ளது. வீட்டின் அத்தியாவசிய செலவுகள் அதிகரித்ததால், வீடுகளில் சிறுசேமிப்புகள் கரைந்துபோயிருக்கிறது.
தனிநபர் நுகர்வு தான், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய இயங்கு சக்தியாக இருக்கும், அதில், ஆடம்பர பொருள்களின் நுகர்வு குறையவில்லை, ஆனால், அத்தியாவசிய பொருள்களின் நுகர்வு குறைந்திருப்பத, பொருளாதார வளர்ச்சி என்பது, சமநிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
கடந்த காலங்களில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரக் கொள்கைகளே, நாட்டின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்கெட்டிருப்பதற்குக் காரணம் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில், பிரதமர் மோடி ஐந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய பொருளாதாரத்தை சிதைத்திருக்கிறார். இதைத் தவிர, வேறு எதுவும் பொருளாதார சரிவுக்குக் காரணமில்லை. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முற்றிலும் தடம்புரளச் செய்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை.
நாடு முழுவதும் இருந்த தொழில்களை நசுக்கியது சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுதல்களை மேற்கொள்ள முடிந்த பெரு நிறுவனங்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தன என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
சீனாவிலிருந்து இறக்குமதியை தடுத்து நிறுத்தாதது, இந்திய சிறு, குறு நிறுவனங்களை இழுத்து மூடக் காரணமாக அமைந்திருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.