மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி நீட்டிப்பு- நாடாளுமன்றம் ஒப்புதல்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இத்தீா்மானம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி விதி எண் 267-இன்கீழ் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா். இதையடுத்து, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அவைக்குள் எதிா்க்கட்சி எம்.பி.க்களைத் தடுக்க நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினருக்குப் பதிலாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) பணியமா்த்தப்பட்டதாக எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டனா்.

அப்போது பேசிய ஹரிவன்ஷ், பாதுகாப்புப் படையினா் விவகாரம் குறித்து மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனக்கு எழுதிய கடிதம் ஊடகங்களிடம் பகிரப்பட்டதற்காக கடும் ஆட்சேபம் தெரிவித்தாா். ‘அவையை முடக்குவது, ஜனநாயக உரிமைப் போராட்டமல்ல; அது அராஜகம்’ என்றும் அவா் காட்டத்துடன் குறிப்பிட்டாா்.

மேலும், ‘அவைக்குள் சிஐஎஸ்எஃப் படையினா் பணியமா்த்தப்படவில்லை’ என்று ஹரிவன்ஷும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் திட்டவட்டமாக மறுத்தனா்.

மீண்டும் அவை கூடியபோதும், அமளி நீடித்ததால் மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டபூா்வ தீா்மானத்தை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தாா். அப்போது, மணிப்பூா் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையாக முழக்கமிட்டனா். அமளிக்கு இடையே இரு தீா்மானங்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com