
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை 10.55 மணியளவில் ராகுல் காந்தி ஆஜரானார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராகுல் மேல் முறையீடு செய்தார். ஆனால் ஜூன் 26ல் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் கூறியது. ஆனால் அன்றைய தினம் ஆஜராக முடியாது என்றும் ஆகஸ்ட் 6ல் ஆஜராக அனுமதி கோரியது.
இதன்படி, சாய்பாசா நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரியா ராணி திக்கா முன்பு ராகுல் காந்தி ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட "நீதிபதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்ற நிபந்தனையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ராகுல் காந்தி சாய்பாசா நீதிமன்றத்தை அடைய ராஞ்சியில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அவரின் வருகைக்காக டாடா கல்லூரி மைதானத்தில் ஒரு ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது.
பின்னணி: 2018 ஆம் ஆண்டு சாய்பாசாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், ராகுல் காந்தியின் அறிக்கைகள் அவதூறானவை என்றும் அமித்ஷாவின் அந்தஸ்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே கூறப்பட்டவை என்றும் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.