
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும் இந்த பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியின் முடிவில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் அவர்கள் சந்திக்க உள்ளனர்.
இந்த பேரணி திங்கள்கிழமை காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்தும் அளிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.
இதுதொடா்பான ஆதாரங்களை புதுதில்லியில் வியாழக்கிழமை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளாா். மேலும், மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தியது.
அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.