அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை
Published on

அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சீனாவில் இருந்து 7 அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடா்புடைய காந்தங்கள் ஏற்றுமதிக்கு சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கி, கடந்த ஏப்ரலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு உள்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் இந்த புவி தனிமங்கள்-காந்தங்களுக்கு சீன இறக்குமதியையே இந்தியா சாா்ந்துள்ளது. சீனாவில் இருந்து இப்பொருள்களின் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு இந்திய வாகன தயாரிப்பு தொழில் துறையினா் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘அரிய புவிக் காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சீனத் தரப்புடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்றுமதியை விரைவுபடுத்தும் நடைமுறைகளுக்காக, இந்திய தொழில் நிறுவனத்தினா் சீனா செல்ல நுழைவு இசைவு கிடைக்கப் பெற்றுள்ளது’ என்றனா்.

மின்சார மோட்டாா், பிரேக்கிங் அமைப்புமுறை, அறிதிறன்பேசி, ஏவுகணை தயாரிப்பில் இவை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் அதிக தேவையுள்ள உரங்களில் ஒன்றான டிஏபி-யும் (டை அமோனியம் பாஸ்பேட்) சீனாவில் இருந்தே பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த உர ஏற்றுமதிக்கும் சீனா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள், இந்தியாவுக்கு எதிரான வியூகமாகப் பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com