கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகர் தர்ஷன்file photo
Published on
Updated on
2 min read

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்தது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கெளடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாக, தனது ரசிகர் ரேணுகா சாமியைக் (33) கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் பவித்ரா கெளடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இதுவரை 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா, மகேந்திரன் அமர்வு, எந்த நிலையிலும் நீதி வழங்கும் அமைப்பு, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரியவர் என்றாலும் சட்டத்தைவிட அவர் பெரியவர் இல்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் பிறப்பித்திருப்பது விபரீதமானது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமானது என்று காட்டமாகக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

நடிகை பவித்ராவை சமூக வலைத்தளத்தில் நேரடியாக தாக்கிப் பேசியதால் ஆத்திரம் அடைந்த தர்ஷன், ரேணுகாசாமியை கடத்தி வந்து மூன்று நாள்கள் மறைவான இடத்தில் அடைத்துவைத்துத் துன்புறுத்திக் கொலை செய்தார். இதில் அவரது உள்ளுறுப்புகளில் காயம், தலையில் காயமேற்பட்டு மூளையில் ரத்தக் கசிவு, காதுகள் கிழிந்து இருந்தது, மின்சாரம் பாய்ச்சி தாக்கப்பட்டிருந்தது, நெஞ்செலும்புகள் உடைந்திருந்தது, ஆணுறுப்பு கடுமையான சேதமடைந்திருந்தது போன்றவையே மரணத்துக்குக் காரணம் என உடல்கூராய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, சிறையில் நாற்காலியில் சிகரெட் மற்றும் தேநீர் கோப்பையுடன் தர்ஷன் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவருடன் ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியான போது, சாதாரண மக்களுக்குத்தான் இது சிறையா என்றும், விஐபிக்கள் என்றால் அனைத்து வசதிகளும் கிடைக்குமா என மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மீண்டும், சிறையில் இருந்தவாறு நடிகர் தர்ஷன் விடியோ அழைப்பில் பேசும் விடியோ வெளியாகியிருந்தது. 25 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில் தர்ஷன் தனக்கு வேண்டியவருடன் விடியோ அழைப்பில் நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு மறுமுனையில் இருப்பவரும் தர்ஷனின் உடல்நிலை, வசதிகள் குறித்து கேட்டறியும் வகையில் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தர்ஷனின் ஜாமீனை இன்று ரத்து செய்திருக்கிறது.

Summary

The Supreme Court has cancelled the bail of Kannada actor Darshan, who was arrested in the murder case of his fan Renukaswamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com