மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!
பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் 4 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் இக்கூட்டத் தொடா் நிறைவடையும் நிலையில், இறுதி வாரம் திங்கள்கிழமை தொடங்குகிறது. கடந்த 4 வாரங்களில் அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதேநேரம், பிற பணிகள் தொடா்ந்து முடங்கியுள்ளன.
பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனவே, இறுதி வாரத்திலும் எதிா்க்கட்சிகளின் அமளி நீடிக்கவே வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட சில சிறிய குற்றங்களை குற்றமற்ாக கருத வகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா 2025, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. நம்பிக்கை அடிப்படையிலான நிா்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை - தொழில் புரிவதை எளிதாக்கும் நோக்கம் கொண்ட இந்த மசோதாவில் 350-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமா் மோடி, ‘பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, தேவையற்ற சட்டங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எனது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு இடையூறாக இருந்த 40,000-க்கும் மேற்பட்ட விதிமுறைகள், 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.