இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவைப்பட்டால் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்றும் ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அதுபற்றி பேசவில்லை என்றும் மாநிலங்களவை எம்.பி. சையத் நசீர் ஹுசைன் கூறியுள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.