
இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள நிலையில், புது தில்லியில் அவா் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்களை மீண்டும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என வாங் யி உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்த நிலையில், இந்திய தொழில்துறை பின்னடைவை சந்தித்திருந்தது.
மேலும், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த ஆலோசனையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை வாங் யி சந்தித்துப் பேசவுள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமா் மோடி சீனா செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.