
புது தில்லி, ஆக. 19: வெளிநாடுகளில் இருந்து பருத்தியை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நம் நாட்டு ஜவுளித் துறைக்குத் தேவையான பருத்தி கிடைப்பதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 18-இல் வெளியிட்டது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஜவுளித் துறை உள்பட இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அபராதம் விதிக்கும் வகையில் இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரியை அண்மையில் அறிவித்தது.
தற்போது பருத்தியின் விநியோகத்தை மேம்படுத்தவும், விலைகளை நிலைப்படுத்தவும் இறக்குமதி வரி இல்லாமல் பருத்தியை 40 நாள்களுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஜி.டி.ஆர்.ஐ. என்ற ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் பருத்தி இறக்குமதி 107.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2024ஆம் நிதியாண்டில் 579.2 மில்லியன் டாலராக இருந்த நமது பருத்தி இறக்குமதியின் மதிப்பு 2025-ஆம் நிதியாண்டில் 1.20 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தற்போது அளித்துள்ள சலுகை, ஜவுளி ஆலைகளுக்கும், ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜி.டி.ஆர்.ஐ. அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.