இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025’ மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததும், இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.
இதன்மூலம், இணையவழியில் பணம் வைத்து விளையாடப்படும் போக்கா், ரம்மி, சூதாட்டம், லாட்டரி, பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் சட்டவிரோதமாக்கப்படும். மற்ற இணையவழி விளையாட்டுகள் மற்றும் கல்விசாா், திறன்மேம்பாட்டு விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படும்.
இணையவழி விளையாட்டை நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம், விளம்பரம் செய்பவா்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம், மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவா்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் இந்தச் சட்டமசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக, மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘இணையவழி விளையாட்டுகளுக்கு மக்கள் அடிமையாவது ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, நிதி இழப்பு ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட 45 கோடி மக்கள் இந்த விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா். நடுத்தர குடும்பங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வீணாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஒரு நோய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா்.
சுமாா் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய இணையவழி விளையாட்டுத் துறைக்கு இந்த மசோதா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ‘இந்திய கேமிங் கூட்டமைப்பு’ போன்ற பல தொழில்அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. எனினும், வருமான இழப்பைவிட மக்களின் நலனே முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.