
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.
எரித்துக்கொல்லப்பட்ட நிக்கியின் சகோதரரை திருமணம் செய்துகொண்ட பெண், 2016 முதல் தனக்கும் நிக்கியின் குடும்பத்தால் வரதட்சிணை கொடுமை நடந்ததாகக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவி நிக்கியை கொடூரமாக தீயிட்டு எரித்து கொலை செய்துள்ளார் கணவர் விபின் பாடி.
விலை உயர்ந்த ஸ்கார்பியோ சொகுசு கார், ராயல் என்ஃபீல்டு பைக், ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வரதட்சிணையாகக் கொடுத்தும், மேற்கொண்டு ரூ. 36 லட்சம் கேட்டு விபினின் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பகிரப்பட்டு வரும் விடியோவில், நிக்கியின் தலைமுடியினை பிடித்து இழுத்துவரும் விபின், எளிதில் எரியக்கூடிய திரவத்தை அவர் மீது ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விபின் மற்றும் அவரின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிக்கியின் குடும்பத்தாரும் வரதட்சிணை கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக அந்த வீட்டு மருமகள் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
நிக்கியின் சகோதரர் ரோஹித் குஜ்ஜார் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, கார், தங்கம், ரொக்கப் பணம் வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிக்கியின் குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மீனாட்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, குஜ்ஜாரின் குடும்பத்தால் வரதட்சிணைக் கொடுமைக்குள்ளானேன். என் கணவர் ரோஹித் குஜ்ஜாரின் சகோதரிகளான நிக்கி, காஞ்சன் ஆகியோர் கூட வரதட்சிணைக்காக என்னைத் தாக்கியுள்ளனர். அவர்களின் பெற்றோரும் பலமுறை எனக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். என் சகோதரரை ஒருமுறை துப்பாக்கியால் சுடவும் செய்துள்ளார் என் கணவர் ரோஹித். இருமுறை நான் கருக்கலைப்புக்கும் கட்டாயப்படுத்தப்பட்டேன் எனக் குறிப்பிட்டார்.
இதோடுமட்டுமின்றி, நிக்கியின் மாமியார் குடும்பத்தாருக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். நிக்கியின் கணவர் விபின் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரதட்சிணைக் கொடுமை செய்பவர்கள் அல்ல என்றும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தனது சகோதரர் தீபக் பாடி, நிக்கியின் குடும்பத்துக்கு எதிராக 2024ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஏடிசிபி சுதிர் குமார், வழக்குத் தொடர்பான விவரங்களை அவர்கள் கொடுத்தால், அதனை ஒப்பிட்டு உண்மை என்ன என்பதை உறுதி செய்ய முடியும் என்றும், இதுவரை அதுபோன்று எந்தவொரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.