
வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் திறமையான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லிங்க்ட்இன் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
லிங்க்ட்இன் திறமை நுண்ணறிவு ஆய்வு அறிக்கையின் தரவுகளின்படி, வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து, திறமையான இளைஞர்கள் கேரளத்துக்கு திரும்புவது கணிசமாக அதிகரித்துள்ளது.
கேரள அரசின் ஆலோசனை அமைப்பான கேரள வளர்ச்சி மற்றும் புதுமை உத்தி கவுன்சில் (K-DISC) ஏற்பாடு செய்த திறன் கேரள உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 9,800 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேரளா திரும்பியுள்ளனர், இது ஒட்டுமொத்தமாக, வெளிநாடுகளிலிருந்து வேலையை விட்டுவிட்டு திரும்பியவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையாக உள்ளது.
அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் பிரிட்டன் நாடுகளிலிருந்து தலா 1,600 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேரளம் திரும்பியிருக்கிறார்கள். அதுபோல கத்தாரிலிருந்து 1,400-க்கும் மேற்பட்டவர்களும் அமெரிக்காவிலிருந்து 1,200 க்கும் மேற்பட்டவர்களும் கேரளம் திரும்பியிருக்கிறார்கள்.
உலக அளவில் நிலவரம் இவ்வாறு இருக்க, உள்நாட்டு நிலவரம் சொல்லும் தரவுகளில் சுமார் 7,700 இளைஞர்கள் கர்நாடகத்திலிருந்து கேரளம் திரும்பியிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (4,900), மகாராஷ்டிரம் (2,400), தெலுங்கானா (1,000) மற்றும் ஹரியானா (800) மாநிலங்கள் உள்ளன.
உள்நாட்டில் நடந்த இடம்பெயர்வு தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையதாகவும், உலகளாவிய இடம்பெயர்வு சிவில் மற்றும் மெக்கானிக்கல் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடையதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
லிங்க்ட்இன் வெளியிட்டிருக்கும் தரவின்படி, கேரளம் திரும்பும் இளைஞர்கள், முதன்மையாக ஐடி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், அதே நேரத்தில் பலர் தொழில்களைத் தொடங்கவும் சொந்த ஊர் திரும்புகார்கள் என்கிறது.
பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் செய்யும் வேலையை விட, ஒரு குறிப்பிட்ட வயதில், நிலையான, அழுத்தமில்லாத வேலைவாய்ப்பு, குடும்பத்திற்கு அருகாமையில் இருப்பது, வேலை - வாழ்க்கை சமநிலை போன்றவையும், இளைஞர்கள் சொந்த ஊர் திரும்புக் காரணிகளாக அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.