ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: 12 மணி நேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்!

வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளமுடைய பாலத்தை 12 மணிநேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர்.
ராணுவத்தினர் கட்டிய பாலத்தின் வழியே செல்லும் வாகனங்கள்
ராணுவத்தினர் கட்டிய பாலத்தின் வழியே செல்லும் வாகனங்கள்படம் - ஏஎன்ஐ
Published on
Updated on
2 min read

ஜம்மு - காஷ்மீரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளமுடைய பாலத்தை 12 மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர்.

தற்போது, ராணுவத்தினர் கட்டிய பெய்லி பாலத்தின் வழியே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27ஆம் தேதி மேக வெடிப்பு நேர்ந்தது. இதேபோன்று, 27ஆம் தேதி ராம்பன் மாவட்டத்தில் நேர்ந்த மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜம்மு - காஷ்மீரில் ஜம்மு, கதுவா, சாம்பா, பதான்கோட், குருதாஸ்பூர் உள்ளிட்டப் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் காவல் துறையினருடன் ஹெலிகாப்டர் உதவியோடு ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஜம்மு நகரில் பாய்ந்து செல்லும் தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் சீற்றத்தால், ரூ.147 கோடியில் கட்டப்பட்ட (இருவழிச் சாலை) பாலத்தின் கிழக்குப் பகுதி அடித்துச்செல்லப்பட்டது. இதனால், அப்பாலத்தின் வழியே போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

கடும் மழைக்கு மத்தியிலும் விரைந்து செயல்பட்ட ராணுவத்தினர், சேதமடைந்த பாலதின் அருகே 110 மீட்டர் நீளத்தில் தற்காலிக பெய்லி பாலத்தை அமைத்துள்ளனர். தற்போது அந்த பாலத்தின் வழியே போக்குவரத்து இயக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.

பாலத்தின் பாகங்கள் முன்னரே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, கட்டுமானப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு விரைவாக ஒன்றிணைக்கப்படுவதே பெய்லி பாலமாகும்.

இது குறித்து மேஜர் ஜெனரல் முகேஷ் பன்வாலா கூறியதாவது,

''ஜம்முவை இணைக்கும் முக்கிய பாலத்தின் கிழக்குப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய நீண்ட நாள்கள் தேவைப்படும். இதனால், வரையறுக்கப்பட்ட பணியிடத்தில் விரைந்து செயல்பட்ட ராணுவப் பொறியாளர்கள், 12 மணிநேரத்தில் பெய்லி பாலத்தை அமைத்துள்ளனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகன சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆக. 26ஆம் தேதி முதல் விமானப் படை ஹெலிகாப்டருடன் ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான முக்கிய சாலையும் சேதமடைந்ததால், ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கப்பட்டு மருந்து, உணவு, பால் மற்றும் நிவாரணப் பொருள்கள் கொண்டுச்செல்லப்படுகின்றன. அங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. எந்தவித இக்கட்டான சூழலிலும் மக்கள் நலனுக்காக ராணுவம் செயல்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

Summary

Jammu, J&K: The Indian Army constructed Bailey Bridge, the fourth bridge on River Tawi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com