
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மோதலுக்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிசோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில், செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதிகளில் ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூருக்கும் பிரதமர் மோடி செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமரின் மணிப்பூர் பயணத்தின்போது, அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தும், சில திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தேயி மற்றும் குகி ஆகிய சமூகங்களுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இதில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 60,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே, மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இந்த நிலையில்தான், பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.