சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

டிரம்ப் கூடுதல் வரிவிதிப்பைத் தொடர்ந்து ஏற்றுமதித் தொழில் சிக்கல்கள், அரசின் அணுகுமுறை பற்றி...
Swadeshi Policy and Export Problems
போட்டா போட்டி...
Published on
Updated on
5 min read

உலகின் மிகப் பெரிய வல்லரசெனக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் போவதாக அறிவித்துவரும் இந்தியாவும் ஏற்றுமதிக்கான தண்ட வரி விதிப்பில் சிக்கி மோதிக்கொண்டிருக்கின்றன.

‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன். இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து, 24 மணி நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தேன். 5 மணி நேரத்தில் அவர் நிறுத்திவிட்டார்’ என்று (எத்தனையாவது முறை என்று கணக்கே தெரியவில்லை) மீண்டும் ஒரு முறை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இவ்வளவு காலமாக இந்தியா என்று சொல்வார். இந்த முறை பிரதமர் மோடியின் பெயரையே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் டிரம்ப். ஆனால், பிரதமர் தரப்பிலிருந்து எவ்வித மறுப்போ, விளக்கமோ இதுவரையிலும் இல்லை, இப்படியொரு தொலைபேசி அழைப்பு வந்ததா? மோடியுடன் டிரம்ப் பேசினாரா? இல்லையா? மக்களுக்குத் தெரியாது.

ஆனால் இன்னொரு பக்கம், கடந்த சில வாரங்களில், வரி – வர்த்தகம் தொடர்பாக, டொனால்ட் டிரம்ப் நான்கு முறை பேச அழைத்தபோதும், அவருடைய தொலைபேசி அழைப்புகளை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார் என்பதாக ஜெர்மன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்தான இறக்குமதிகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ள 50 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வந்ததுமே அதன் விளைவுகள் தொழில்துறையில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. கூக்குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. நாட்டின் ஏற்றுமதிசார் தொழில்துறைகளில் எதிர்காலம் பற்றிய பேரச்சம். இன்னும் சில மாதங்களில் கிரவுண்ட் லெவலில் இதன்  தாக்கம் மிகப் பெரியளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தப் பிரச்சினையின் மூல காரணம் எனக் கூறப்படுவது, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதுதான்!

அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகரான பீட்டர் நவரோ, ‘இந்தியா ஒரு நாளுக்கு 10 லட்சம் பேரல்களுக்கும் அதிகமாக பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் பாதிக்கும் மேலாக ரஷியாவிடமிருந்து மலிவான விலையில் பெறப்பட்டதுதான். இந்த லாபம் நேரடியாக இந்தியாவின் அரசியல் தொடர்புள்ள நபர்களுக்கும், புதின் அரசுக்கும்தான் கிடைக்கிறது’ (2022-ல் ரஷியாவிடமிருந்து இவ்வாறு எண்ணெய் வாங்கத் தொடங்கியபோதிலும் இந்தியாவில் ஒருபோதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவுமில்லை; மக்கள் பயன்பெறவுமில்லை) என்று குறிப்பிட்டுள்ளார்.

“கூடுதல் வரிவிதிப்புக்குக் காரணமெனக் கூறப்படும் ரஷிய எண்ணெய் இறக்குமதி விஷயத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்; யார் பயன் பெறுகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள், அதற்கான விலையை வரிகள் மூலம் ஏற்றுமதியாளர்கள் கொடுக்கிறார்கள், குறைந்த விலை ரஷிய கச்சா எண்ணெய் மூலம் சுத்திகரிப்பாளர்கள் லாபம் பெற, ஏற்றுமதிக் குறைவாலும் வணிக எதிர்வினைகளாலும் நம்முடைய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

ஆக, இதுதொடர்பாக என்ன செய்யலாம்? என்ன செய்யப் போகிறோம்? என்று திட்டவட்டமாக அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, சுதந்திர தின உரையின்போதே, ‘அனைத்துத் துறைகளிலும் உள்நாட்டு உற்பத்திக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும்; உலக அளவில் பொருளாதார சுயநலம் நிலவும் சூழலில் தற்சார்பை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்’ என்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தொடர்ந்து, சில நாள்கள் முன் மாருதி மின்-கார் அறிமுக விழாவில் பேசும்போது, “உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் தாரக மந்திரமாக மாற வேண்டும்” என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி.

கூடுதலாக, சுதேசி என்பதற்கான புதிய விளக்கமொன்றையும் அளித்தார்.

“உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். யார் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அதில் இந்தியர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே முக்கியமானது.

“ஜப்பான் நிறுவனத்தின் வாகனம் (சுஸுகி) இந்தியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும் சுதேசி பொருள்தான். யார் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிக் கவலையில்லை. அது டாலராக இருந்தாலும் சரி, பவுண்டாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்திலிருந்து எந்தப் பொருள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அது எனது நாட்டு மக்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.”

விடுதலைப் போராட்ட காலத்தில் சுதேசி / கிராம பொருளாதாரத்தையும் ராமராஜ்யத்தையும் மகாத்மா காந்தி முன்வைத்தார். கிராம பொருளாதாரத்தில் காந்தியின் மூளையாகத் திகழ்ந்த தமிழரான ஜெ.சி. குமரப்பாவோ  என்றென்றைக்குமான எத்தனையோ பொருளியல் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். காலமும் எவ்வளவோ மாறிவிட்டது. நாடும் விடுதலை பெற்று முக்கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போதைய புதிய விளக்கத்தின்படி ஆப்பிள் போனும் ஹுண்டாய் கார்களும்கூட சுதேசிப் பொருள்களாகிவிடுகின்றன.

பற்றியெரியும் தற்போதைய பிரச்சினை சுதேசி பொருள்கள், பொருளாதாரம்  பற்றியதல்ல. அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பைச் சமாளித்து இந்திய ஏற்றுமதித் தொழில்துறையைக் காப்பது பற்றி.

நம்மைப் போலவே பிரேசில் நாட்டுக்கும் 50 சதவிகித வரிகளை விதித்துள்ளார் அதிபர் டிரம்ப். ஆனால், நிலைமையை எதிர்கொள்ளப் பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டது அந்த நாடு.

இங்கே, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இருக்கின்றன. தொழிலைச் சார்ந்து, நூற்பு, பட்டன், சாய மற்றும் சலவைத் தொழில்கள் இருக்கின்றன. நேரடியாக 5 லட்சம் பேரும் மறைமுகமாக (துணைத் தொழில்கள் மூலம்) 4 லட்சம் பேரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திருப்பூர் ஆயத்த ஆடைத் தொழில் துறை மட்டும் ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் சுமார் ரூ. 12 ஆயிரம் கோடி வரையிலும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிதான்.

அதிபராகப் பொறுப்பேற்றுக் கூடுதல் வரிவிதிப்பு பற்றி அதிபர் டிரம்ப் பேசத் தொடங்கியதிலிருந்தே இந்தத் தொழிலிலும் வெளித்தெரியாத சுணக்கம் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சினையால் தற்போது ரூ. 500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

திருப்பூர் மண்டலத்தில் பாதிப்பு என்றால் திருப்பூரில் மட்டும் பாதிப்பு என்று பொருளல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கே வந்து லட்சக்கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். அல்லாமல், பிகார், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற நாட்டின் பல்வேறு  மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை தேடிவந்து, இங்கேயே தங்கிவிட்டிருக்கின்றனர். வேலை இல்லாமல் போனால், வேறு வழியில்லாத நிலையில் இந்தத்  தொழிலாளர்கள் – ஆண்களும் பெண்களும் - எல்லாரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டியிருக்கும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து திருப்பூரில் தங்கி வேலை செய்வோர் எல்லாரும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப நேரிடும் (இப்போதே பெண் தொழிலாளர்களுக்குப் பாதி ஊதியம்தான் என்று சொல்கிறார்களாம்).

இவ்வாறு பிழைப்புக்கான தொழிலை இழந்து லட்சங்களிலும் பல்லாயிரங்களிலும் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப நேர்ந்தால் சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

இறால் மற்றும் கடல்சார் உணவுகள், ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்தும் இலங்கைக்கு அனுப்பியும் கன்டெய்னர்கள்வழி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக ஏற்றி அனுப்பப்பட்ட ரூ. 60 கோடி மதிப்புள்ள 500 டன் சரக்குகளை அமெரிக்க நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் வரிச் சுமையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமை நீடித்தால் இறால், கடல் உணவுகள் தொழிலே முடங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையின்றித் தவிக்க நேரிடும். ஆந்திரத்தில் இப்போதே ஆள்குறைப்புகள் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.

தோல் தொழிலிலும் இதே நிலைதான். ஏற்றுமதியை நம்பி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோல் பொருள்கள் மற்றும் காலணி தயாரிப்பு தொழில்கள் இருக்கின்றன. இவற்றைச் சார்ந்தும் சில லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

மேலும், ரத்தினக் கற்கள், நகை அணிகலன்கள் போன்ற ஏற்றுமதித் தொழில்களெல்லாமும் இருக்கின்றன.

அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமே  என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. மாற்று தேடுவது அவ்வளவு எளிதல்ல. அல்லாமல் உடனடி சாத்தியமுமல்ல.

எந்தெந்த நாடுகள் வாங்கும்? அந்த நாடுகளுக்கெல்லாம் வாங்கும் திறன் இருக்கிறதா? ஐரோப்பிய நாடுகளுக்கான  ஏற்றுமதி குறைவு. லத்தீன் அமெரிக்க  நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்; என்றாலும், பணம் பெறுவது உத்தரவாதமில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள பல நிறுவனங்கள் இப்போது இந்திய இறக்குமதியைத் (ஆர்டர்களைத்) தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, நிலைமை இதேபோல தொடர்ந்தால், அதாவது, வரி நிரந்தரமானால் இந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டாலும் வியப்பதற்கில்லை. நிறுவனங்கள் எத்தகைய வணிக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் பொருத்திருக்கிறது இவற்றின் எதிர்காலம்.

வாங்குவோரும் இனி எங்கே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தேடுவது இயல்பே.  ஆடைகளுக்காக வரி குறைவான வங்க தேசம் போன்ற நாடுகளுக்குச் செல்வார்கள். இவ்வாறு பிற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப் பழகிவிட்டார்கள் என்றால் அவர்களை மீண்டும் இந்தியா நோக்கித் திருப்புவது கடினமாகிவிடும்.

தற்போது தயாரித்தவற்றை மட்டும் அருகிலுள்ள சில வெளிநாடுகளுக்கு அனுப்பி, கடைசியாகச் சில வேலைகளைச் செய்து, அங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம் எனக் கூறப்பட்டாலும் இதுவும் நடைமுறையில் சாத்தியமல்ல என்கிறார்கள். இல்லாவிட்டால், ஏற்றுமதி செய்யப்பட்டவற்றை அடக்க விலையில், அல்லது தள்ளுபடியில்தான் விற்க நேரிடும்.

ஏற்றுமதிக்கென தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கு இந்தியாவில் சந்தையில்லை; கொள்வாருமில்லை. தவிர, விலையும் கிடைக்காது. நிலைமை தொடர்ந்து, வழக்கமான ஏற்றுமதி சாத்தியமில்லாமல் போனால், இவர்கள் எப்படியும் இந்திய சந்தைக்குள் நுழைந்து உள்நாட்டு விற்பனையாளர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்சினையால் சிறு - குறு - நடுத்தர தொழில்முனைவோர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் எல்லாம் சிக்கல் ஏற்படத் தொடங்கிவிடும். வாராக் கடன் பிரச்சினைகள் தொடங்கிவிடும் (நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவிகிதம் வரையிலும் இத்தகைய நிறுவனங்கள் மூலம்தான் நடைபெறுகின்றன).

ஆள் குறைப்பு, வேலை நாள்கள் குறைப்பு, ஊதிய வெட்டு எனத் தொழில்களில் தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் – சமுதாயத்திலேயே - மக்களுடைய வாழ்க்கையிலேயே நேரடியாக எதிரொலிக்கும்.

(இவ்வளவுக்கும் நடுவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு முழு வரிவிலக்கைத் தொடர்ந்திருக்கிறது இந்தியா. மிகவும் அதிகமாகப் பருத்தி விளையும் நாடு இந்தியா. உலகில் விளையும் பருத்தியில் 25 சதவிகிதம் இங்கேதான். ஏற்கெனவே, பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்ற நிலையில் வரி இல்லாமல் பஞ்சு இறக்குமதியைத் தொடர்ந்தால்...)

ஒரு பக்கம், அமெரிக்க நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தபோதிலும், ‘வரிகள் விஷயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கறாராகத் தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், ‘இந்தியா ஒருபோதும் தலை வணங்காது; 140 கோடி மக்களின் சுய மரியாதையை உயர்த்திப் பிடிப்போம், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நம்முடைய ஏற்றுமதி அதிகமாக இருக்கும்’ என்று மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பக்கம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று முதன்மைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேசுவரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தக் கூடுதல் வரி விதிப்புப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்? ஏற்றுமதித் தொழில்துறையை அரசு எவ்வாறு ஆதரிக்கப் போகிறது? இந்தத் தயாரிப்புகளை என்ன செய்யப் போகிறோம்? நிலைமை தொடர்ந்தால், இவற்றுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை எவ்வாறு, எங்கே உருவாக்கப் போகிறோம்? என்பது பற்றி இதுவரையிலும் அரசுத் தரப்பிலிருந்து திட்டவட்டமான, தெளிவான அணுகுமுறைகளோ விளக்கங்களோ தெரிவிக்கப்படவில்லை.

மாறாக, தற்சார்பு பற்றியும் சுதேசி பொருளாதாரம் பற்றியுமான பேச்சுகள்  தொடங்கியிருக்கின்றன. இந்தியத் தயாரிப்புகளையே வாங்குங்கள் என்று அழைப்பு விடுப்பதெல்லாம் கிட்டத்தட்ட பிரச்சினையின் உண்மையான தீவிரத்தைக் கவனத்தில் கொண்டுவராமல் மடைமாற்றி விடுவதைப் போலாகிவிடும், மக்களே சமாளியுங்கள், உங்களால் முடியும் என்பதைப் போல.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஏற்கெனவே அடிவாங்கிய ஏற்றுமதித் தொழில் துறை சற்று எழுந்தாற்போல இருந்த நிலையில்தான் இந்தப்  புதிய பூதம் புறப்பட்டிருக்கிறது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவில் லாபம் பெற்றுக்கொண்டிருப்பது தனியார் நிறுவனம். இதன் காரணமாக அமெரிக்கா விதிக்கும் கூடுதல் வரியால் பாதிக்கப்படுவது நாட்டின் தொழில் துறையும் சாதாரண உழைக்கும் மக்களும்தான்.

வரிகளும் வலிகளும் எப்போது விலகும்?

Summary

Export industry issues following Trump's additional tariffs, government's approach...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com