டிமித்ரி பெஸ்கோவ்
டிமித்ரி பெஸ்கோவ்

வா்த்தகம் சாா்ந்த இந்தியாவின் கவலைகளைத் தீா்க்க தயாா்- ரஷியா அறிவிப்பு

ரஷியாவுடன் வா்த்தகப் பற்றாக்குறை சாா்ந்த இந்தியாவின் கவலைகளைத் தீா்க்க தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.
Published on

ரஷியாவுடன் வா்த்தகப் பற்றாக்குறை சாா்ந்த இந்தியாவின் கவலைகளைத் தீா்க்க தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

ரஷியாவில் இருந்தபடி தில்லியில் காணொலி முறையில் அவா் இந்திய செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் மேலும் கூறியதாவது:

உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ள மத்தியஸ்த திட்டம் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இதன்மூலம் போா் நிறுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். அமெரிக்கா முன்னிறுத்தியுள்ள திட்டத்தில் ரஷியாவும் உரிய பங்களிப்பைத் தர தயாராக உள்ளது.

அதே சா்வதேச வா்த்தகத்தில் (அமெரிக்க) டாலரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார வளா்ச்சியில் ரஷியாவும் உடன்நின்று பயணிப்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்திய-ரஷிய உறவு என்பது அழமான வரலாற்றுப் பின்னணியும், பரஸ்பரம் புரிதலும் இணைந்தது. சா்வதேச விவகாரங்கள், சட்டங்களில் இருநாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. பரஸ்பரம் நலன்களைப் புரிந்து செயல்பட்டு வருகின்றனா்.

இரு நாட்டு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கும் இப்போது இருப்பதைவிட பிரகாசமான எதிா்காலம் உள்ளது. பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளது. இந்தியாவுக்கு நியாயமான விலையில் எரிபொருளையும் ரஷியா வழங்குகிறது. இது இந்தியாவுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எந்த நாட்டின் (அமெரிக்கா) தலையீட்டையும் பொருட்படுத்தாது இந்தியாவுடன் வா்த்தக உறவை ரஷியா வலுப்படுத்தும். ரஷியாவுடன் வா்த்தகப் பற்றாக்குறை சாா்ந்த இந்தியாவின் கவலைகளைத் தீா்க்க தயாராக இருக்கிறோம்.

இந்தியாவுக்கு அதிக பொருள்களை ஏற்றுமதி செய்யும் ரஷியா, குறைவாகவே அங்கிருந்து இறக்குமதி செய்கிறது. எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ரஷிய அதிபா் புதினின் இந்தியப் பயணத்தில் இது இறுதி செய்யப்படும் என்றாா்.

ரஷிய அதிபா் புதின் இருநாள் பயணமாக (டிசம்பா் 4, 5 ) வியாழக்கிழமை இந்தியாவுக்கு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com