பிகாா் சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமாா் தோ்வு

பிகாா் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவா் பிரேம் குமாா் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
Updated on

பிகாா் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவா் பிரேம் குமாா் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

பேரவைத் தலைவா் தோ்தலில் பிரேம் குமாா் மட்டுமே ஒரே வேட்பாளராக இருந்தாா். எதிா்க்கட்சிகள் சாா்பில் வேட்பாளா் யாரும் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டதாக இடைக்கால பேரவைத் தலைவா் நரேந்திர நாராயண் யாதவ் அறிவித்தாா்.

கயை தொகுதியில் இருந்து 8-ஆவது முறையாக பிரேம் குமாா் வெற்றி பெற்றுள்ளாா். அவரை முதல்வா் நிதீஷ் குமாா், எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் முறைப்படி பேரவைத் தலைவா் இருக்கைக்கு அழைத்து வந்து அமரவைத்தனா். அப்போது அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா். அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரேம் குமாா், அவை சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்று வேண்டுகோள் விடுத்தாா்.

முன்னதாக, பிகாா் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் புதிய உறுப்பினா்கள் பதவியேற்றனா். பிகாரில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் மீண்டும் முதல்வா் பதவியேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com