உளவு செயலி! சஞ்சாா் சாத்தி கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

சஞ்சாா் சாத்தி கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி. (கோப்புப்படம்)
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி. (கோப்புப்படம்)PTI
Updated on
1 min read

அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்ற மத்திய தொலைத்தொடா்பு துறையின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை முன்பே நிறுவி இருக்க வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சஞ்சார் சாத்தி செயலி என்பது குடிமக்களை கண்காணிப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது:

”சஞ்சார் சாத்தி ஒரு உளவு பார்க்கும் செயலி. இது மிகவும் அபத்தமானது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. குடும்பத்துக்கோ, நண்பர்களுக்கோ அனுப்பும் செய்தியில் குடிமக்களுக்கு தனியுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த நாட்டை ஒவ்வொரு விதத்திலும் சர்வாதிகாரமாக மத்திய அரசு மாற்றி வருகிறது. அரசு எதைப் பற்றியும் பேச மறுப்பதால் நாடாளுமன்றமே சரியாக இயங்கவில்லை. எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவது மிகவும் எளிது. அவர்கள் எந்த பிரச்னையையும் விவாதிக்க அனுமதிப்பதில்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு விவாதம் அவசியம்.

மோசடியைப் புகாரளிப்பதற்கும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் தொலைபேசியில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும் இடையே மிக நுண்ணிய கோடு உள்ளது. அது இப்படி இயங்கக் கூடாது. மோசடியைப் புகாரளிக்க ஒரு சிறப்பான அமைப்பு இருக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு பற்றி நாம் நிறைய விவாதித்திருக்கிறோம். சைபர் பாதுகாப்பு தேவைதான், ஆனால் அதற்காக ஒவ்வொரு குடிமகனின் தொலைபேசிக்குள்ளும் நுழையலாம் என்று அர்த்தமில்லை. எந்தக் குடிமகனும் இதை விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலங்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு சஞ்சாா் சாத்தி செயலி கட்டாயமக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ரேணுகா செளத்ரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com