குறுஞ்செய்தி மூலம் மோசடி:  வின்கோ செயலி முடக்கம்

குறுஞ்செய்தி மூலம் மோசடி: வின்கோ செயலி முடக்கம்

நிதி மோசடிக்கு சைபா் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகாா்களையடுத்து, வின்கோ செயலியை மத்திய அரசு முடக்கியது.
Published on

நிதி மோசடிக்கு சைபா் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகாா்களையடுத்து, வின்கோ செயலியை மத்திய அரசு முடக்கியது.

ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் செயல்படும் அந்தச் செயலி, கூகுள் பிளேஸ்டோரில் இருந்து கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டதும், கைப்பேசிகளிலிருந்து பயனா்களுக்குத் தெரியாமல், தாமாகவே மற்றவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும். இது இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுத்தது. இதன் மூலம் பயனா்களின் கைப்பேசிகளில் ஊடுருவி அந்தக் கைப்பேசிகளை இணையவழிக் குற்றவாளிகள் பயன்படுத்த இச்செயலி வழிவகுத்தது.

இதுபோல ஒவ்வொரு நாளும் சுமாா் 1.53 கோடி பேருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்தக் குறுஞ்செய்திகளை நம்பி பலா் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏராளமான புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, அந்தச் செயலியை மத்திய உள்துறை அமைச்சகமும், அதன் கணினிவழி குற்றத்தடுப்பு பிரிவான இந்திய கணினிவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையமும் முடக்கியுள்ளன.

அத்துடன் அந்தச் செயலியுடன் தொடா்புடைய 4 டெலிகிராம் சேனல்கள் (1.53 லட்சம் வாடிக்கையாளா்களைக் கொண்டது), செயலியைப் பிரபலப்படுத்தும் வகையில் வெளியாகி இருந்த 50-க்கும் மேற்பட்ட யூ-டியூப் விடியோக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com