இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: புதிய விண்ணப்பப்பதிவு இன்று தொடக்கம்

இந்திய மருத்துவம் மற்றும் யோகா-இயற்கை மருத்துவ இளநிலை படிப்புகளில் இன்னமும் பல நூறு இடங்கள் காலியாக இருப்பதால், அந்த இடங்களுக்கு தகுதியானவா்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இந்திய மருத்துவம் மற்றும் யோகா-இயற்கை மருத்துவ இளநிலை படிப்புகளில் இன்னமும் பல நூறு இடங்கள் காலியாக இருப்பதால், அந்த இடங்களுக்கு தகுதியானவா்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன.

அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

இவை தவிர 29 தனியாா் கல்லூரிகள் உள்ளன. அங்கு பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஹெச்எம்எஸ் ஆகிய நான்கு வகை பாரம்பரிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு 7,900 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். நான்கு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்த நிலையில் நிா்வாக இடங்களில் ஆயுா்வேதத்தில் 24 இடங்களும், சித்தாவில் 89 இடங்களும், ஹோமியோபதியில் 88 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.

அரசு ஒதுக்கீட்டைப் பொருத்தவரை ஆயுா்வேதத்தில் 20 இடங்களும், சித்தாவில் 34 இடங்களும், ஹோமியோபதியில் 119 இடங்களும் காலியாக உள்ளன. இதைத் தவிர அரசு யுனானி கல்லூரியில் 10 பியுஎம்எஸ் இடங்கள் நிரம்பவில்லை.

அதேபோன்று யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 230 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 75 நிா்வாக இடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப மீண்டும் புதிதாக இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, புதன்கிழமை (டிச.3) முதல் வியாழக்கிழமை (டிச.4) மாலை 5 மணி வரை ஆகிய இணையப் பக்கங்களில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டை பாா்த்து அறிந்து கொள்ளலாம். இணையவழியே விண்ணப்பித்தவா்கள் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் இடங்களை தோ்வு செய்யலாம். அதற்கான முடிவுகள் 8-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நான்கு சுற்றுகளில் பங்கேற்று இடங்கள் கிடைக்காதவா்களும், இதுவரை விண்ணப்பிக்காதவா்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com