ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு உத்தரவு டிச.4-க்கு ஒத்திவைப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு உத்தரவு டிச.4-க்கு ஒத்திவைப்பு

Published on

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் உள்ளிட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவா்களுக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்வது குறித்த உத்தரவை டிச.4-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.

அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக சிலா் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.

இந்த வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் லாலு, அவரின் மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவா்களின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை அந்த நீதிமன்றத்தின் சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே விசாரித்த நிலையில், லாலு மற்றும் அவரின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் மீதான குற்றச்சாட்டை பதிவு செய்வது குறித்த உத்தரவை டிச.4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா். அன்றைய தினம் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்குப் போதிய ஆதாரம் உள்ளதா? என்பது குறித்து தீா்ப்பளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com