தில்லியில் புதிதாக 3 நாய்கள் பராமரிப்பு மையங்கள்: எம்சிடி திட்டம்
தில்லியில் தெரு நாய் பிரச்னையைக் கையாளும் விதமாக புதிதாக 3 நாய்கள் பராமரிப்பு மையங்களை அமைக்க தில்லி மாநகாரட்சி திட்டமிட்டுள்ளது.
விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) திட்டத்தின்கீழ் தில்லியில் 54,623 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
துவராகாவில் நாய்கள் பராமரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பெல்லா சாலை மற்றும் பிஜ்வாசன் பகுதிகளில் மேலும் இரு பராமரிப்பு மையங்களை அமைக்க எம்சிடி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மாநகராட்சியின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின் எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: துவாரகா செக்டாா் 29-இல் நாய்கள் பராமரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெல்லா சாலை மற்றும் பிஜ்வாசன் பகுதியில் கூடுதலாக இரு பராமரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆக்ரோஷமான, ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களுக்காக துவாரகாவில் ஒரு பராமரிப்பு மையம் அமைக்க 3 ஏக்கா் பரப்பில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு 1,000-1,500 நாய்களை பராமரிக்க முடியும். பிற இரு பராமரிப்பு மையங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக அமைக்கப்படும்.
தில்லியில் 4 கோசாலைகள் அவற்றின் கையாளும் திறனைக் கடந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, கூடுதல் பசுக்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. இதனால், புதிய கோசாலைகளைப் அமைக்க தில்லி மாநகாரட்சி திட்டமிட்டு வருகிறது என்றாா் ஆணையா் அஸ்வனி குமாா்.
தன்னாா்வ அமைப்புகள் பராமரித்து வரும் மையங்களில் ரேபிஸ் பாதிப்பு மற்றும் கருத்தடை செய்யாமல் இருத்தல் ஆகியவைக் கண்டறியப்பட்டால், அந்த அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் கொள்கைக்கு தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
தெரு நாய்கள் மட்டுமல்லாமல், 6,347 பசுக்களை மீட்கப்பட்டு கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 731 குரங்குகள் பிடிக்கப்பட்ட அசோலா பாட்டீ சுரங்கங்கள் வனவிலங்குகள் சரணாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக எம்சிடி தெரிவித்துள்ளது.

