

ஹரித்வார் மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரைச் சேர்ந்த லக்கன் குமார்(36) வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சடலத்தைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சடலத்தின் கண்கள், மூக்கு, காதுகள் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சடலம், மருத்துவமனையின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், அதன் உறுப்புகளை எலிகள் கடித்து குதறி வைத்திருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் சவக்கிடங்கில் உள்ள பெரும்பாலான குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். குளிர்சாதனப் பெட்டியில் ஒரு பெரிய துவாரம் உள்ளதாகவும், அதன் வழியாக எலிகள் நுழைந்து சடலத்தைக் கடித்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.
இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்ட மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் ரன்வீர் குமார், சவக்கிடங்கில் உள்ள இரண்டு அல்லது மூன்று குளிர்சாதனப் பெட்டிகளின் கதவுகள் சேதமடைந்துள்ளதாகவும், நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.