

மத்திய அரசு எத்தனை முதலீட்டு மாநாடுகள் நடந்தாலும் நாட்டின் பணவீக்கம் மட்டும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (டிச. 7) குற்றம் சாட்டினார்.
மேலும், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என எந்தப் பெயர் வைத்தாலும் வேலையின்மை அதிகரித்தபடியே இருப்பதாகவும் விமர்சித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் பகுதியில் இது குறித்து செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் பேசியதாவது,
''நாட்டின் ஒட்டுமொத்த சந்தையையும் மற்றவர்கள் கைகளில் கொடுக்கும் சூழல் நிலவுகிறது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பெரிய பெரிய முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. முதலீட்டு மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்புத் துறை கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதற்கும் முதலீட்டு மாநாடுகள் நடக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் யதார்த்தத்திற்கு வந்திருக்க வேண்டும். நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். அப்படி நடந்துள்ளதா?
நாட்டின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. உலக அரங்கில் நாம் நம்மை நிரூபிப்பதற்கு அடுத்த நாட்டின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது.
அமெரிக்கா நம் மீது வரி விதிப்பை சுமத்தியதிலிருந்து நமது வணிகமும் தொழிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகராக 90 வரை ரூபாய் மதிப்பு சரிந்தது. ரூபாய் மதிப்பு சரிவு என்பது அரசாங்கத்தின் சரிவாகும்.
மக்களை சிந்திக்க விடாமல், உணர்வுகளால் மட்டுமே இந்த அரசாங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு (பாஜக) நாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால் நமது மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த அரசை வெளியேற்ற வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.