

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியின் முந்தைய கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டபோது 2 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமாய் ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியின் முந்தைய கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளனர்.
அப்போது துப்பாக்கி வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
போலீஸார் கூறுகையில், இசை மற்றும் நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன. அசுதீனின் மகன் பன்னிரண்டு வயது சுஹைல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
முன்னா கானின் மகன் 17 வயது ஷாகாத் படுகாயமடைந்தார்.
இருவரும் அலிகஞ்சில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சுஹைல் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஷாகாத் உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஆனால் பின்னர் அவரும் பலியானார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதம்ப் பாண்டே சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த சம்பவம் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
எனினும், சரியான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று அவர் கூறினார்.
நிகழ்வில் இருந்தவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். போலீஸார் உடல்களைக் கைப்பற்றி கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு கொண்டாடும் பழக்கம் உள்ளது.
இது சட்டவிரோத செயல் என்றாலும் திருமண நிகழ்ச்சியில் சிலர் இதுபோன்ற கொண்டாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.