நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம்; குழந்தைகள், வயதானவர்களுக்கு கடும் பாதிப்பு! - ராகுல் காந்தி பேச்சு

தில்லி காற்று மாசு குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு...
Rahul gandhi in LS
ராகுல் காந்தி
Updated on
1 min read

ஒவ்வொரு நகரத்திலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் காற்று மாசு குறித்துப் பேசிய ராகுல் காந்தி,

"தில்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பெரும்பாலான நகரங்களில் உள்ள மக்கள் நச்சுக் காற்றைச் சுவாசித்துதான் வாழ்கிறார்கள். அதிக காற்று மாசால் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூத்த குடிமக்கள் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை அரசும் சரி எதிர்க்கட்சிகளும் சரி ஒப்புக்கொள்ள வேண்டியது கட்டாயம். இது கொள்கைரீதியான பிரச்னை அல்ல. காற்று மாசால் மக்கள் பாதிக்கப்படுவதை இந்த அவையில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

ஒவ்வொரு நகரங்களிலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப விரிவான திட்டத்தை செயல்படுத்தி காற்று மாசைக் கட்டுப்படுத்தலாம். அந்த திட்டங்களை அரசு உருவாக்குவது அவசியம்.

அவ்வாறான திட்டங்களை உருவாக்குவதில் இந்த அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இப்போதெல்லாம் இந்த அரசும் எதிர்க்கட்சியும் ஒப்புக் கொள்ளக்கூடிய பிரச்னைகள் அதிகம் இல்லை. காற்று மாசு விவகாரத்தில் ஒருவரையொருவர் விமர்சிக்காமல் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தலாம். இந்த பிரச்னையைத் தீர்க்க அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அனைவரும் பங்கேற்கும் விவாதமாக அது இருக்க வேண்டும். மக்களுக்கு வாழத்தகுதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்.

முறையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன் மூலமாக அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நாம் இந்த பிரச்னையை தீர்க்க முடியாது என்றாலும் பிரச்னையின் பாதிப்புகளைக் குறைத்து மக்கள் வாழும் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம்" என்று பேசினார்.

Summary

Most of our major cities are living under a blanket of poisonous air: Rahul gandhi in LS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com