

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தை சசி தரூர் மீண்டும் புறக்கணித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி தலைமையில் இன்று (டிச.12) காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிள்ளது.
சசி தரூர் கலந்து கொள்ளாதது குறித்து முன்கூட்டியே கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறினாலும், அவர் இந்த மாதிரி ராகுல் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ளாதது இது முதல்முறை கிடையாது. அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.
சசி தரூர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது தனக்கும் தெரியாது என்றும், தெரியப்படுத்தவில்லை என்றும் காங்கிரஸின் தலைமைக் கொறடா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே காங்கிரஸ் கட்சிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத போன்று காட்டிக்கொள்ளும் சசி தரூர், பாஜகவினருடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சசி தரூர் மட்டுமின்றி சண்டீகர் எம்.பி. மணீஷ் திவாரியும் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தகவல்களின்படி, நேற்று கொல்கத்தாவில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டதாகவும் இதனால், அவர் தில்லியில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தையும் சசி தரூர் புறக்கணித்திருந்தார். ஆனால், தான் கேரளத்தில் இருந்ததாக கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த விவாதத்தின் போதும் அவர் கலந்து கொள்ளவில்லை.
அதன்பின்னர் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்திலும் பங்கேற்காத சசி தரூர், தனது தாயார் உடல்நலக்குறைவை சுட்டிக்கட்டிருந்தார்.
இது ஒருபுறம் இருந்தாலும், ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகையையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரேயொரு காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் அதில் கலந்துகொண்டார்.
பாஜகவினருடன் நெருக்கமாகவும் காங்கிரஸில் இருந்து விலகி பயணிக்கும் சசி தரூர் மீது காங்கிரஸ் மேலிடமும் எந்தவித நடவடிக்கையையும் விளக்கத்தையும் கேட்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.