

2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நினைவுநாளை முன்னிட்டு சம்பவத்தின்போது, மக்களைக் காக்க வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு நாடாளுமன்றத்தில் இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இங்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்தில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினா்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் தில்லி காவலர்கள் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள், பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர் கமலேஷ் குமாரியின் தீரத்துக்கு புகழஞ்சலி செலுத்தினர். இவருக்கு மறைவுக்குப் பின் வழங்கப்படும் அசோக சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தாக்குதல் நடைபெற்று இன்று 24-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தினருக்கு ராகுல் தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிக்க.. 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்த மெஸ்ஸி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.