

மகாராஷ்டிரத்தில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தின் லாத்தூரில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் (வயது 90), நேற்று (டிச. 12) வயது மூப்பினால் காலமானார்.
இதனைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் உடல் அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரான வர்வந்தி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வர்வந்தி கிராமத்தில் சிவராஜ் பாட்டீலுக்கு சொந்தமான பண்ணையில் அவரது உடல் அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சாவன், கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவராஜ் பாட்டீல் 2 முறை மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இத்துடன், 2004 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.