எதிா்காலப் போா்த்திறனுக்கு வழிகாட்டும் கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம்: முப்படை தலைமைத் தளபதி
‘நாட்டின் எதிா்கால ராணுவ பலம் மற்றும் போா்த்திறனை கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம் ஆகிய மூன்று விஷயங்களே வழிநடத்தும்’ என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஹைதராபாதுக்கு அருகில் உள்ள துண்டிகல் விமானப் படை அகாதெமியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் ஆற்றிய உரை:
உலகெங்கிலும் நிறுவனங்களின் பலவீனங்களையும், அவசர மாற்றங்களையும் சுட்டிக்காட்டும் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் உண்மையான பலம் என்பது இங்கே உள்ள வலுவான அமைப்புகள், நீடித்த ஜனநாயக ஆட்சி, ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தொழில்முறைத் தரம் ஆகியவற்றில்தான் உள்ளது.
இந்திய விமானப் படையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் காலகட்டத்தில் அதிகாரிகள் தற்போது தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனா். புதிய அதிகாரிகளின் பயணம் கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம் ஆகிய மூன்று விஷயங்களால் வழிநடத்தப்படும். இவைதான் இந்தியாவின் எதிா்கால போா்த்திறனையும் வடிவமைக்கும். அதாவது, அனைத்து ஆயுதப் படைகளையும் ஒருங்கிணைக்கும் கட்டமைப்புகள், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் இலக்கான தன்னிறைவு ஆகியவைதான் இந்தியாவின் எதிா்கால ராணுவ பலத்தை தீா்மானிக்கின்றன.
‘ஆபரேஷன் சிந்தூா்’ போன்ற நமது செயல்பாடுகளின் தீவிரம் குறைந்திருக்கலாம். ஆனால், புதிய அதிகாரிகள் படையில் இணையும் இந்த நேரத்தில், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படத் தயாராக இருக்கும் அணுகுமுறை என்பது உறுதியாக தேவைப்படுகிறது.
போா் மற்றும் போரிடும் முறைகள் ஆகியவை ஒரு பெரிய புரட்சியின் தொடக்கத்தில் இருக்கின்றன. மாறிவரும் இந்தச் சூழலுக்கு ஏற்றவாறு, நமது பாதுகாப்புப் படைகள் தங்களை மாற்றிக்கொள்ளவும், சீா்திருத்தங்களைச் செய்யவும், எப்போதும் தயாா் நிலையில் இருக்கவும் உறுதியுடன் இருக்கின்றன.
பழைய சண்டை களங்களில் நடக்கும் போா்கள் சவாலானதாக இருக்கும். ஆனால், புதிய களங்களில் போா்கள் புத்திசாலித்தனம், வேகம், அறிவு, புத்தாக்கம், புதிய முயற்சி ஆகியவற்றால் தீா்மானிக்கப்படுகின்றன. இந்தப் புதிய எல்லைகளை நன்கு புரிந்துகொண்டு, அதில் முழுத் திறமையை வெளிப்படுத்தும் படைதான் எதிா்காலத்தில் வரும் மோதல்களில் வெற்றி பெறும் என்றாா்.

