

தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த முழக்கங்களும் எழுப்ப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், 'பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், இன்று இல்லையேல் நாளை..' என்று முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி,
"பிரதமர் மோடிக்கு எதிராக அப்படி எந்த முழக்கங்களும் எழுப்படவில்லை. மேடையில் அப்படி யாரும் சொல்லவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் யாரோ ஒருவர் அல்லது காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பிரதமர் மோடியை அப்படி கூறியதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவ்வாறு முழக்கமிட்டது யார் என்று தெரியவில்லை. அப்படி யாரும் கூறியதாகவும் எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி இருக்க இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்ற அவைகள் செயல்பட வேண்டும் என்று பாஜகவினர் நினைப்பதில்லை.
நாங்கள் தில்லி காற்று மாசுபாடு குறித்து விவாதம் நடத்தக் கோரி வருகிறோம். ஆனால் அவர்கள் அதைச் செய்ய முன்வரவில்லை" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு ஏன் முயற்சிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு திட்டத்தின் பெயரை மாற்றுவதனால் எவ்வளவு செலவு ஆகிறது என்பது மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. திட்டத்தின் பெயரை மாற்றுவதனால் என்ன பலன்? இதனை யார் மாற்றுகிறார்கள்? திட்டத்தில் மகாத்மா காந்தி என்ற பெயரை நீக்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.